Monday, December 22, 2008

நாவினாற் சுட்ட வடு.

ஒரு காலத்தில் மிகவும் கோபப்படக்கூடிய பையன் ஒருவன் இருந்தான். எதற்கெடுத்தாலும், யார் பேசினாலும் காரணமின்றி கோபப்படுவான். அவனுடைய தகப்பனார் அவனிடம் ஒரு பை நிறைய ஆணிகளையும் சுத்தியலையும் கொடுத்து, ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் ஒரு ஆணியை வீட்டின் காம்பவுண்டு சுவரில் அடிக்கும் படி கூறினார். அடுத்த நாளில் அவன் 37 ஆணிகளை சுவரில் அடிக்க வேண்டியதாயிற்று. அத்ற்கடுத்த சில வாரங்களில் அவன் தன்னுடைய கோபத்தை எப்படிக்கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.

சுவரில் அவன் அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. காலப்போக்கில் சுவரில் ஆணி அடிப்பதை விட கோபத்தை கட்டுப்படுத்துவது எளிதானது என்பதை அவன் கண்டுபிடித்தான். கடைசியாக ஒரு நாள் அவனால் கோபப்படாமலேயே இருக்க முடிந்தது. அதை அவன் தகப்பனாரிடம் தெரிவித்தான். அவர் அவன் கோபப்படாமல் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணியை சுவரில் இருந்து பிடுங்குமாறு கூறினார். கோபப்படாத ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணியாக அவன் பிடுங்க ஆரம்பித்தான். நாட்களும் நகர்ந்தன. ஒரு நாள் சுவரில் இருந்த எல்லா ஆணிகளும் பிடுங்கப்பட்டு விட்டன.அதை அறிந்த தகப்பனார் அவனை அந்த சுவரினருகே அழைத்துச் சென்றார்."நல்ல காரியம் செய்தாய் மகனே. முன்பு இந்த சுவர் எவ்வளவு அழகாக சுத்தமாக இருந்தது?! இப்போதும் அதே சுவர்தான். ஆனால் பழைய நிலையிலா இருக்கிறது? இல்லை அல்லவா.
கோபத்தில் நீ சொல்லும் வார்த்தைகள் கூட இப்படித்தான் - சுவரில் இருக்கும் ஓட்டைகள் போல - வடுவை உண்டாக்கி விடும். ஒருவனை கத்தியால் குத்திவிட்டு பின்பு நாம் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் கூட, அந்தக் காயத்தால் ஏற்பட்ட வடு அவன் உடலில் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். வார்த்தைகள் மனதில் ஏற்படுத்தும் வடுவும், காயத்தில் ஏற்படும் வடுவைப்போன்றதே என்பதை உணர்ந்து கொள்.அன்பும், நட்பும் நிறைந்திருப்பவர்களை பெறுவதென்பது ரத்தினங்களைப் பெறுவது போன்றது. அவர்கள் உன்னை மகிழ்விப்பார்கள், உற்சாகப்படுத்துவார்கள். எப்போதும் நீ கூறுவதை காது கொடுத்து கேட்பார்கள். சுக, துக்கங்களில் பங்கு கொண்டு ஆறுதலான வார்த்தைகளை அள்ளித்தருவார்கள். எல்லாவற்றையும் விட அவர்கள் எப்போதுமே திறந்த மனதுடன் உனக்காகவே காத்திருப்பார்கள். புரிகிறதா? நான் எப்போதாவது இது போன்ற ஓட்டையை உண்டாக்கி இருந்தால் என்னை மன்னித்து விடு மகனே."

3 comments:

Sanjai Gandhi said...

:)

Senthil said...

Thank you sanjai gandhi

coolzkarthi said...

மிக்க பயனுள்ள கதை...வாழ்த்துக்கள் நண்பரே.....